உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல பூஜைக்கு சபரிமலை கோவில் திறப்பு; 1000 பேருக்கு மட்டும் அனுமதி

மண்டல பூஜைக்கு சபரிமலை கோவில் திறப்பு; 1000 பேருக்கு மட்டும் அனுமதி

 திருவனந்தபுரம் : கேரளாவில், பத்தினம்திட்டா மாவட்டத்தின் சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலால், ஆறு மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. கடந்த மாதத்தில், மாத பூஜைகளுக்காக, ஐந்து நாட்கள் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரும், 16ம் தேதி முதல், ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் துவங்க உள்ளது. இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் இந்த சீசனுக்காக, கோவிலை திறக்க, கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

* போதிய காற்றோட்டம் இல்லாத இடங்கள், கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும்

* சுகாதார பாதுகாப்பு கருதி, ஒரு நாளில், 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

* பக்தர்கள் தங்களுடைய கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை தூய்மைபடுத்துவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்

* சமீபத்தில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்

* நிலக்கல் வருவதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், வைரஸ் பாதிப்பு இல்லை என, பெறப்பட்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும்

* சபரிமலை வரும் வழியில் இதற்காக முக்கிய இடங்களில், பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

* வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 10 சதவீதம் பேருக்கு, அறிகுறிகள் இருக்கலாம். மேலும், 2 சதவீதம் பேருக்கு, மூன்று மாதங்கள் வரை அறிகுறிகள் இருக்கலாம் என, நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், இதுபோன்றவர்கள் பயணத்தை தவிர்க்கவும்

* மலை ஏற வேண்டியிருப்பதால், நோயில் இருந்து விடுபட்டவர்கள், அதற்கேற்க தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

* வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், நிலக்கல், பம்பையில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !