உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்காக செயல் திட்டம்

சபரிமலை பக்தர்களுக்காக செயல் திட்டம்

 திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக, கேரள அரசு செயல் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மகர விளக்கு பூஜைக்காக, இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், வரும், 16ம் தேதி திறக்கப்படவுள்ளது.வைரஸ் பரவலை தடுக்க, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஒரு நாளுக்கு, 1,000 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும், பக்தர்களின் மருத்துவ தேவைக்காக, மாநில அரசு, ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா நேற்று கூறியதாவது:சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில், 48 அரசு மற்றும் 21 தனியார் மருத்துவமனைகள், பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோட்டயம் மாவட்டத்தில், 27 மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும், டாக்டர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்புக் குழுவினர் நிலைநிறுத்தப்படுவர். பம்பா பகுதியில், அவசர சிகிச்சைக்காக மையங்கள் அமைக்கப்படும். சன்னிதானம் அமைந்துள்ள பகுதியில், அவசரகால அறுவை சிகிச்சைக்கும், மையம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !