மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்
அன்னூர்: மழை வேண்டி, அன்னூர் அருகே வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும், திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அன்னூர் பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு போதுமான மழை இல்லை. இதையடுத்து கெச்சங்கிணறு கிராம மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும், திருமணம் செய்தால், மழை பெய்யும் என்று ஐதீகம் உள்ளது. எனவே, திருமணம் செய்யலாம் என முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று காலை அரச மரம் மற்றும் வேப்ப மரம் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மஞ்சள் பூசி, திருமணத்துக்கு தயார் செய்யப்பட்டது. மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பேரூராதீன வேள்வி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை நடத்தி, அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதில் ஊர் பிரமுகர்கள், ராமசாமி, தாமோதரசாமி, பாலசுப்பிரமணியம், உள்பட கெச்சங்கிணறு, முகாசி செம்சம்பட்டி, தாத்தம்பாளையம், பொகலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அபிஷேகமும் அதன் பிறகு அன்னதானமும் வழங்கப்பட்டது. பலர் திருமணத்திற்கு எழுதிய மொய் தொகை கோவில் உண்டியலில் சேர்க்கப்பட்டது.