திருத்தணி முருகன் கோவிலில் 15ல் கந்த சஷ்டி துவக்கம்
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், வரும், 15 முதல், 21ம் தேதி வரை, கந்தசஷ்டி விழா நடக்கிறது.இதன் முக்கிய நிகழ்வுகளில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகை மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா, ஏழு நாட்கள் நடைபெறும்.அந்த வகையில், இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா, வரும், 15ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, காவடி மண்டபத்தில், உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெறும்.வரும், 16ல், மூலவருக்கு பட்டு, 17ல், தங்க கவசம், 18ல் திருவாபரணம், 19ல் வெள்ளி கவசம், 20ல் சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.அன்று மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 21ம் தேதி நண்பகலில், உற்சவர்முருகனுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.ஆறுபடை வீடுகளில், முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். காரணம், முருகப்பெருமான், திருத்தணி மலையில் சினம் தணிந்ததால், புஷ்பாஞ்சலி நடந்து வருகிறது.கொரோனா தொற்று காரணமாக, தினமும் நடக்கும் லட்சார்ச்சனை விழாவில், பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.அதேபோல், புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாணத்திலும்,பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.திருத்தணி முருகன் கோவிலின், உபகோவிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, வரும், 15ம் தேதி துவங்குகிறது.