கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; டில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், இன்று (டிசம்பர் 25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில், குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் இடம் பெற்றன. வீடுகளிலும், ஸ்டார் தொங்கவிட்டு, குடில் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து, மக்கள் பண்டிகையை வரவேற்றனர். அந்தவகையில், டில்லியில் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிறகு, பாதிரியார்களிடம் கலந்துரையாடினார். முன்னதாக, கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணெத்தையும் ஊக்குவிக்கட்டும் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். - நமது டில்லி நிருபர்