ராமாயண காலத்திலேயே தீபத்துாண்கள் ஏற்றப்பட்டன ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் பேச்சு
மதுரை: "ராமாயண காலத்திலேயே மலைகளிலும், குன்றுகளிலும் தீபத்துாண்கள் ஏற்றப்பட்டன. இப்பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது" என ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் பேசினார்.
மதுரை சேதுபதி பள்ளியில் கம்பன் எனும் ராம பக்தன் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியதாவது: ராமன் மீது அதிபக்தி கொண்டவர் கம்பர். அந்த பக்தியை அவர் வெளிப்படுத்திய வழி தமிழ் மொழி. பலரும் தமிழ் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிலப்பதிகாரம், அகநானுாறு, புறநானுாறு தெரியாது.ராமாயணம் 127 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.வால்மீகிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உண்டு. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் எழுதிய அவர், தமிழகத்தில் வசித்தார். நம் பாரத தேசத்தில் சனாதன தர்மத்தில் திருநீறு இட்டுக்கொள்ள வேண்டும். அதில் வேற்று மதத்தினரை நாம் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. ஞானத்தை அடைய ஆர்வமாக இருக்க வேண்டும். அதில் கர்வம் இருக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு நாம் பண்பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. குரு மூலம் நாம் கற்கும் தர்மத்தை பல லட்சம் பேருக்கு கொண்டு சொல்ல வேண்டும். ராமரின் பரம்பரையினர் குரு வம்சத்தில் வந்தவர்கள். அதனால்தான் குருஷேத்திரம் என்ற பெயர் வந்தது.ஞானத்தை கண்டவர்கள் கம்பர், வால்மீகி. வீட்டில் மனைவியோடு இருக்கும் நேரத்தை விட அலுவலகத்தில் உள்ள நண்பர்களோடுதான் அதிக நேரம் செலவிடுகிறோம். எனவே மனைவியை விட, உடன் பணியாற்றுபவரிடம் இயல்பாகவே அன்பு அதிகரிக்கிறது. நம் மனதில் உள்ள காம, குரோதங்களை வெல்ல ராமாயணத்தை படிக்க வேண்டும். சமீப காலங்களில் விவாகரத்து அதிகம் நடக்கின்றன. தம்பதியருக்கிடையே பிணைப்பு ஏற்பட ராமாயணத்தை படிக்க வேண்டும். உண்மையில் ராமாயணம் என்பது மிகத் துாய்மையான காதல் கதை. காதலின் சின்னமாக தாஜ்மஹாலை போற்றும் நாம், ராமர் காதலுக்காக காதல் மனைவியை அடைய உண்டாக்கிய சேதுபாலத்தை போற்ற வேண்டும். உண்மையிலேயே சிறப்பான காதல் காவியம் ராமாயணம்தான். இவ்வாறு அவர் பேசினார். உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, மதுரைக் கல்லுாரி வாரிய தலைவர் சங்கர சீத்தா ராமன் பங்கேற்றனர்.