உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ்

எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ்

இறைவன் மனிதனாக பிறந்த மானிட உடலேற்பைக் கொண்டாடுகிற விழா இது. இந்த ஆண்டு நமக்கு ஒரு சிறப்பான கிறிஸ்துமஸ் விழாவாக இருக்கிறது. ‘தட்சனுக்கு பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும் இச்சனங்கள் சொன்னாலும் தெய்வ திருக்குமரா தாலேலோ’ என்று இயேசு காவியத்தில் கவிஞர் கண்ணதாசன் தாலாட்டு பாடுகிறார். எனவே இப்பேற்பட்ட கடவுளுடைய திருக்குமாரன் பிறந்த நிகழ்வுதான் வரலாற்றை கி.மு., (கிறிஸ்துவுக்கு முன்), கி.பி., (கிறிஸ்துவிற்கு பின்) என பிரிக்கிறது. இந்த ஆண்டு நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற பொழுது, நாம் எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும், எதை செய்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது தான். பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் குறிப்பிடுவது போல போதுமான ஓய்வை நிலத்திற்கும், கால்நடைகளுக்கும், நம்மிடம் வேலை செய்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். முதலாளிகள் விரும்பும் போதெல்லாம் ஓய்வு தான். ஆனால் ஏழைகளுக்கும், நிலத்திற்கும், விலங்குகளுக்கும் நாம் ஓய்வு கொடுக்க வேண்டும். எனவே சுற்றுச்சூழலை பேணுபவர்களாக மாற வேண்டும். இப்போது சுற்றுச்சூழல் மாசுபட்டு இருக்கிறது. காற்று வெப்பமடைந்திருக்கிறது. அதனால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. அதன் காரணமாக எதிர்பார்க்காத இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. எனவே இப்படி சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுபடுத்தினோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்பதை சொல்லும் கிறிஸ்துமஸ்- ஆக இருக்கிறது.


இரண்டாவதாக நம்மிலே கடன் வாங்குபவர்களும், கடன் கொடுப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி கடன் கொடுப்பவர்களிடம் சில பேர் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு 10 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டியிருப்பார்கள். ஆனால், அசல் ஓய்ந்தபாடில்லாமல் அவர்கள் பல ஆண்டுகளாக கடன்காரர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர் களுடைய கடன்களை வட்டிக்காரர்கள் மன்னிக்க வேண்டும். இந்த கிறிஸ்துமஸ் எல்லோருக்குமான மகிழ்ச்சியை தர வேண்டும். குறிப்பாக ஏழை, வறியவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டும். ‘‘Let thousand flowers bloom’’ என்பது இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் செய்தியாக இருக்கட்டும். பிறக்கப்போகிற கிறிஸ்துமஸ் நமக்கு மகிழ்ச்சியும், சமூகத்தில் ஓய்வையும், யாருக்கெல்லாம் விடுதலை தேவையோ அவர்களுக்கு விடுதலையையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். – லுார்து ஆனந்தம். சிவகங்கை மறைமாவட்ட ஆயர்


 இயேசு பிறப்பு உலகுக்கான நற்செய்தி


உ லகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துவின் பிறப்பு வெறும் செய்தி அல்ல. இப்பிறப்பு உலகுக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி. உலகில் மானுட மகனாய் உருவெடுத்து, உலகிற்கு ஒளியூட்டியவர் இவர். புத்துலகை படைத்த பெரியவர் இவர். இவர் பிறந்தநாளை உலகோர் கொண்டாடுவது என்பது வெறும் அடையாளம் அல்ல. இக்கொண்டாட்டத்தின் ஒவ்வொரு பரிமாணமும் அர்த்தம் உள்ளவை. கனித்த உள்ளடக்கத்தால் செறிந்தவை ஆகும். பூவுலகின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட இயேசுவின் பிறப்பில் உலகு சந்தித்த அதிசயங்கள் பல; விந்தைகள் பல; கிறஸ்துவின் தோற்றத்திற்குப் பின் உருவான மானுட வளர்ச்சி நோக்கில் உருவான அனைத்து சிந்தனை வடிவங்களிலும், கருத்தியல் புரட்சிகளிலும் இயேசு தந்த நற்செய்தியின் சாயல் உண்டு. நற்செய்தியின் உருவகமாய் நின்ற இயேசு, இன்றைய உலகின் அனைத்து தேவைகளுக்கும் பரிகாரியாய் இருப்பது போல, எழும் அனைத்துப் பிரச்னைகளின் விடியலுக்கும் வழிகாட்டும் நெறியாளராகவும் உள்ளார்.


இந்தியாவில் கிறிஸ்தவம் இயேசுவின் சீடருள் ஒருவரின் காலத்தில் உருவான ஒன்று. எண்ணிக்கையில் கிறிஸ்தவம் ஒரு மறை என்ற நிலையில், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பினும், இந்திய கிறிஸ்தவம் அதன் எண்ணிக்கையையும் கடந்து நாடு முழுவதும் அதன் அரிய மானுடப்பணியாய் தன்இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. இயேசு காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், இறையாண்மை என்பனவெல்லாம் இந்திய சமூகத்தின் வழிகாட்டு நெறிகளாக இருப்பது கண்கூடு. இந்திய கிறஸ்தவம், தன் தனித்த அடையாளங்களைக் காத்துக் கொள்ள உறுதி கொண்டிருந்தாலும், அனைத்து சமூகங்களோடும், அனைத்து சமயங்களோடும் நட்புறவு கொள்ளவும், அதன்மூலம் சமூக நல்லிணக்கத்த பேணவும் உறுதியேற்கிறது. கிறிஸ்து முன்வைத்த மக்களின் மேன்மையை, வாழ்நெறியாக்குவதை உறுதியுடன் செயற்படுத்த முன்னிற்க துணிவோம். உலகில் தோன்றி உலகுக்காய் வாழ்ந்து மடிந்த இயேசு பிறந்தநாளில், இவர் பிறப்பை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். –அந்தோணி சவரிமுத்து கத்தோலிக்க பிஷப், மதுரை உயர்மறை மாவட்டம்


 துன்புறும் மக்களோடு இருக்கிறார் இயேசு


அ னைவருக்கும் இயேசுவின் பிறப்பு பெருவிழா வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறேன். இயேசு பிறப்பின் 2025 ம் ஆண்டு யூபிலி விழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அருளையும் தரக்கூடியது.


இந்த ஆண்டு யூபிலி ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம். யூபிலி ஆண்டு என்பது பழைய ஏற்பாட்டு விவிலிய ஆதாரத்தை கொண்டது. தற்போது 50 வது யூபிலி ஆண்டை கொண்டாடி வருகிறோம்.


யூபிலி என்றால் மகிழ்ச்சி. இதை ஆங்கிலத்தில் ஜூபிலி, லத்தினில் ஜூபிலேயும் என அழைக்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக கி.பி., 1300 ல் திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் இந்த யூபிலி ஆண்டை ஆரம்பித்து வைத்தார். ஒவ்வொரு நுாறாவது ஆண்டும் யூபிலி ஆண்டை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


ஆனால் 1350 ல் 50 ஆண்டுக்கு ஒரு முறை இந்த விழா கொண்டாடப்பட வேண்டும் என ஆறாம் திருத்தந்தை கிளமெண்ட் கேட்டு கொண்டார். 1475 முதல் 25 ஆண்டுக்கு ஒரு முறை இந்த விழாவை கொண்டாட வேண்டும் என திருத்தந்தை ஆறாம் பயஸ் கேட்டு கொண்டார். ஒவ்வொரு 25 வது ஆண்டும் நாம்முடைய மீட்பின் தொடக்கத்தை நாம் நினைவு கூர்கிறோம். எனவே 2025 ல் நாம் யூபிலி ஆண்டை கொண்டாடுகிறோம். கி.பி., 2000 ஐ மாபெரும் யூபிலி ஆண்டாக கொண்டாடினோம். இயேசுவின் பிறப்பு எளிமையான உள்ளத்துடன் இருக்கக்கூடிய அனைவருக்கும் சொந்தமானது. 2025 ஆண்டுகளுக்கு முன்னே மாட்டுக்குடிலில் பிறந்த இயேசு இன்று நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும். அவர் எளிமையான உள்ளம் கொண்டவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறப்பார். மிடுக்கான மற்றும் மிகவும் அழகுபடுத்தப்பட்ட இடங்களிலும், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்ட நிலையில் உள்ளோரை கண்டுக்கொள்ளாத எந்தவொரு உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசுவின் பிறப்பு நிகழாது. அனைத்தையும் படைத்து பராமரித்து பாதுகாக்கும் கடவுள் தமது அன்பின் அடையாளமாய் தனது மகனை இவ்வுலகிற்கிற்கு அனுப்பினார். அவர் துன்புறும் மக்களோடு இருக்கிறார். போர், வன்முறை, கலவரம், பஞ்சம், பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், ஆபத்துகள், விபத்துகள் என சமூகத்தில் நடக்கும் பல்வேறு தீமைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரோடும் இயேசு இம்மானுவேலாக உடனிருக்கிறார். தளர்ந்த நெஞ்சத்திற்கு துணையாக பிறக்கிறார். நமக்கு துணையாக இருக்கும் ஆண்டவரின் பிறப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தரட்டும். அன்று இயேசுவின் பிறப்பு அதை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது போல இன்று அனைவருக்கும் இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் ஆங்கில புத்தாண்டு 2026 நல்வாழ்த்துகள்... – பி.தாமஸ் பால்சாமி, பிஷப் திண்டுக்கல் மறை மாவட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !