நோயற்ற வாழ்வு வேண்டி கோமாதா பூஜை
சூலூர்: பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், உலக மக்கள் நலன் வேண்டி, கோமாதா பூஜையில் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
சிவராம்ஜி சேவா டிரஸ்ட் சார்பில், பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், உலக மக்கள் நலன் வேண்டி கோமாதா பூஜை நடந்தது. சூலூர், கருமத்தம்பட்டி, பல்லடம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், டிரஸ்ட் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஆசிரம நிர்வாகி சுவாமி கேசவானந்த மகராஜ் பூஜையை நடத்தி வைத்து பேசுகையில்," தீபாவளி பண்ணடிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபங்கள் ஏற்றுவதால் இருள் அகன்று ஒளி பிறக்கிறது. அதுபோல், முப்பத்து முக்கோடி தேவர்கள் குடிகொண்டிருக்கும் கோமாதாவை வழிபடுவதால், வாழ்வில் நோயற்ற வாழ்வும், உயர்ந்த கல்வியும், அழியாத செல்வங்களும் கிடைக்கும். கோமாதா தரும் பால் முதல் சாணம் வரை எப்படி மக்களுக்கு பயன்படுகிறதோ, அதேபோல், மக்களும், பிறருக்கு சேவை செய்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். தொடர்ந்து, டிரஸ்ட் உறுப்பினர்கள் கோமாதாவை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி மலர்தூவி வழிபட்டனர்.