அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில், நேற்று மாலை, சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் மகா தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் கண்டு வழிபடுவர். இந்நிலையில், நேற்று மாலை, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. இதையொட்டி, சந்திரசேகரர் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், வழக்கமாக தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா, மற்றும் தீப விழாவில், மகா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே, அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவில், கோவிலுக்கு வெளியே நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும், ரத்து செய்யப்பட்டதால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.