புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்
ஈரோடு: ஈரோடு, புனித அமல அன்னை ஆலயத்தின், நடப்பாண்டு தேர்த்திருவிழா, கொரோனா வழிகாட்டு நெறிமுறையால், வரும், 13ம்தேதி எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் எட்டு மாதத்துக்குப் பிறகு, ஆலயத்தில் நேற்று ஞாயிறு திருப்பலி தொடங்கியது. வழக்கம்போல் நான்கு திருப்பலி நடந்தது. முன்னதாக, 8:00 மணி திருப்பலி முடிந்ததும் தேர்த்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமை வகித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்துள்ள நிலையில், தொடர்ந்து வார நாட்களில் வழக்கம்போல், திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடக்கும். வரும், 13ல் தேர்த்திருவிழா, வீதி ஊர்வலம் இன்றி, வேண்டுதல் தேர் ஊர்வலத்துடன் நடக்கும். ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் வரும்போது, பக்தர்கள் சுற்றி வர அனுமதி இல்லை. நான்கு திருப்பலிகளிலும், வேண்டுதல் தேர் எடுக்கப்படும். விழா மற்றும் ஞாயிறு திருப்பலி வழிபாடுகளில், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள, முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.