வெண்ணைமலை கோவிலில் மேம்பாட்டு பணிகள் மும்முரம்
கரூர்: வெண்ணைமலை கோவில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும். அதன்படி, ஜூன் மாதம், தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் சார்பில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணி தொடங்கப்பட்டது. தற்போது பணி விறுப்பாக நடந்து வருகிறது. அதில், 1.57 கோடி ரூபாய் மதிப்பில் பாதைகளை மேம்பாடு செய்து, தார்ச்சாலை மற்றும் பேவர் பிளாக் நடைபாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதில், கோவிலை சுற்றி, பிரதான சாலையிலிருந்து என மொத்தம், 1,300 மீட்டர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 30.85 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், 14.59 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில், 11.56 லட்சம் மதிப்பில் ஓய்வுக் கூடம், 1.32 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது. இதில், 650 மீட்டர் கோவிலை சுற்றி வடிகால் கட்டுமான பணி நடக்கிறது. மேலும், கோவிலுக்கு வரும் குழந்தைகள் இனிமையாக பொழுதை கழிக்க, சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதில், ஊஞ்சல், சறுக்கு மரம், மீன் தொட்டி, இயற்கை நீரூற்று அமைக்கும் பணிகள் நடக்கின்றன.