வரும் 27ல் சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு
காரைக்கால்; திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணி துவங்கியது.காரைக்கால் திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக உள்ள திருநள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக நடைபெறும்.
இந்தாண்டிற்கான சனிப் பெயர்ச்சி வரும் 27ம் தேதி விடியற்காலை 5.22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப் பெயர்ச்சிக்கு பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய ,மாநில அரசு வழிகாட்டுதல்களுடன் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.மேலும் கோவிலை சுற்றியுள்ள கிழக்கு வீதி, தெற்கு வீதியில், ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நிற்பதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் பந்தல் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.