மருதமலை முருகனை காண விரைவில் லிப்ட்!
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பக்தர்களின் வசதிக்காக லிப்ட் அமைப்பதற்கு, விரைவில், டெண்டர் விடப்படவுள்ளது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து, படிக்கட்டு, சாலை வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, ராஜகோபுரம் வழியாகவும், இடதுபுறம் உள்ள பழைய படிக்கட்டுகள் வழியாகவும் சென்று, பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருபவர்களும் உண்டு.முதியவர்களின் நலன் கருதி, அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல, ரோப்கார் திட்டம் கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மருதமலையில் ஆய்வு செய்த வல்லுனர் குழு, ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, அறிக்கை அளித்தது.இதனையடுத்து, கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, படிக்கட்டுகளின் வழியாக நடந்து செல்ல முடியாத முதியவர்களுக்காக, ராஜகோபுரத்தின் அருகில், நகரும் படிக்கட்டு அல்லது லிப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இவ்விரண்டுக்குமான சாத்தியக்கூறுகள் குறித்தும், வல்லுனர் குழு ஆய்வு செய்தது. ஆய்வில், லிப்ட் அமைக்க வல்லுனர் குழு ஒப்புதல் அளித்தது. இறுதியில், லிப்ட் அமைப்பதற்காக, 10 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, மாதிரி திட்ட வடிவம் கொண்டு வரப்பட்டது.லிப்ட் அமைக்கும் பணி களுக்கான, மாதிரி திட்டத்திற்கு, ஒப்புதல் கோரி, கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. தற்போது, ஒப்புதல் கிடைத்துள்ளது.இந்நிலையில், லிப்ட் அமைப்பதற்கான வல்லுனர் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், இரண்டு வாரங்களில், லிப்ட் அமைக்கும் பணிக்கு, டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது.லிப்ட் திட்டம் பயன்பாட்டுக்கு வந்து விட்டால், படியேறி முருகனை தரிசிக்க சிரமப்படும் முதியவர்களின் சிரமம் தீரும்.மருதமலையில், லிப்ட் அமைக்கும் பணியில், எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமானம் என, இரண்டு துறை சார்ந்த பணிகள் நடப்பதால், லிப்ட் அமைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும், டெண்டர் நிபந்தனைகள் குறித்தும், வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டு வாரங்களில், டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும்.
-விமலா அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ).