கோவில் திருப்பணிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
 சென்னை:தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 10 மாவட்டங்களைச் சேர்ந்த, 12 கோவில்களின் திருப்பணிக்கு என, நடப்பு நிதியாண்டில், 6 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
அந்நிதிக்காக, கோவில்கள் பெயரில், வங்கியில் தனி கணக்கு துவங்க, கமிஷனர் பிரபாகர், சம்பந்தப்பட்ட இணை, உதவி கமிஷனர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.அதன் விபரம்:பத்து மாவட்டங்களில் உள்ள, 12 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள, 6 கோடி ரூபாயை அனுமதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த மானிய நிதி, நேரடியாக கோவில்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, கோவில் திருப்பணிக்கு என வங்கியில், தனி சேமிப்பு கணக்கு துவக்க வேண்டும்.அந்த கணக்கின் நகலை நேரடியாகவோ, கூரியர் வாயிலாகவோ, வரும், 14ம் தேதிக்குள், சென்னை தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். வங்கி கணக்கு நகல் வந்தால் மட்டுமே, மானிய நிதி வழங்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.