10 அடி தூரம் மட்டுமே நகர்ந்த பெருமாள் கோவில் தேர்!
திருவண்ணாமலை : ஆரணியில் நடந்த விபத்தின் எதிரொலியாக, பெருமாள் கோவில் தேரோட்டம், பத்து அடி தூரம் மட்டும் நடந்தது. கடந்த, 1ம் தேதி, ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவில் தேரோட்டத்தின் போது, தேர் கவிழ்ந்ததில், ஐந்து பேர் பலியாகினர். இதை தொடர்ந்து, குடியாத்தத்தில் நடந்த தேரோட்டத்தில், ஐந்து பேர், மின்சாரம் பாய்ந்து பலியாகினர். தமிழக அரசு இந்து அறநிலையத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளின் அனுமதி பெற்று, பகலில் மட்டும் தேர்த் திருவிழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆரணி டவுன் சார்பனார் பேட்டை பெருந்தேவி தாயார் உடனுறை கில்லா வரதராஜப் பெருமாள் கோவிலில், 87வது ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. அதிகாலை, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி தேரில் வைக்கப்பட்டு, 10 அடி தூரம் மட்டுமே, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின், தேர், நிலைக்கு கொண்டு வரப்பட்டது. ஆண்டுதோறும் தேரோட்டம் ஷராப் வீதி, மண்டித் தெரு, காந்தி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், வடக்கு மாட வீதிகள் வழியாக நடக்கும்.
விழாக் குழுவினர் கூறுகையில், ஆரணி மற்றும் குடியாத்தத்தில் நடந்த தேர் விபத்தில், 10 பக்தர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. மேலும், அரசு உத்தரவையும் கடை பிடிக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தாண்டு தேரோட்டம் சம்பிரதாயத்துக்காக, 10 அடி தூரம் மட்டுமே நடந்தது என்றனர்.