ஆருத்ரா விழாவில் விதிமுறைகளைகடைபிடிக்க எஸ்.பி., வலியுறுத்தல்
ராமநாதபுரம், : உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: உத்தர கோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் விழா நாளை, நாளை மறுநாள் நடைபெறுகிறது. தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை டிச.,31 வரை நடைமுறையில் உள்ளது. ஆருத்ரா நிகழ்ச்சியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.தரிசன நேரங்களில் உள்ளூர் பக்தர்கள் 200 நபர்கள் வீதம் கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். பூஜை தட்டு, நைவேத்தியம் சடங்கு பெறுவது, அன்னதானம் வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. விழாவில் 10 வயதிற்கு கீழ், 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கொரோனா நோய் பரவலை தடுக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக மக்கள் அனைவரும் பின்பற்றி, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.