உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

மன்னீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் அறநிலையத்துறை வழிகாட்டு நெறிமுறைப்படி கோவில் உள்பிரகாரத்தில் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது. இங்கு மேற்கு நோக்கி மன்னீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெறும். விழாவை ஒட்டி அன்றாடம் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி என பத்து  நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வழக்கமான தேரோட்டத்துக்கு, அறநிலையத் துறை அனுமதி அளிக்கவில்லை.இதையடுத்து நேற்று முன்தினம் கோவில்  உள்பிரகாரத்தில் சிறிய தேரில் சுவாமி எழுந்தருளச்செய்து தேரோட்டம் நடந்தது. காலை 7:00 மணிக்கு, சிறிய தேரில், அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் எழுந்தருளினார். காலை 8:30 மணிக்கு  தேர்வடம்பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. தேர் கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள நான்கு பிரகாரங்களில். தேர் வலம்வந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து குறைந்த  எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர்.முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி வடம்பிடித்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் சங்கர், முன்னாள் அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள்  உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !