கொரோனா கற்றுக்கொடுத்ததை பாடமாக்கி வாழ்வோம் நலமுடன்
கோவை: கொரோனா தொற்று பரவலுக்கு இடையே, ஆங்கில புத்தாண்டு - 2021 பிறந்திருக்கிறது! அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வு, குறைவில்லாத செல்வம் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்!மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 2020ல் நம்நாடு வல்லரசாகும் என கூறியிருந்தார்.அவரது கனவு நனவாகவில்லை. அதேநேரம், 2020ம் ஆண்டை யாருமே மறக்க முடியாத அளவுக்கு, வாழ்க்கையை புரட்டிப் போட்டது, கொரோனா என்கிற வைரஸ்.ஆறு மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். வைரசோடும், மழையோடும், புயலோடும், பசியோடும் போராடிய ஆண்டாக இருந்தது.என்றாலும், வலிகளை மறந்து, அன்போடு, அக்கம்பக்கத்தினரோடு நெருக்கமாகி, நானிருக்கிறேன் என்கிற சகோதர பாசத்துடன், உதவிய நெஞ்சங்களை அடையாளம் காட்டிய, அழகிய வருஷமாகவும் இருந்தது.இயந்திரமயமான வாழ்க்கைக்கு மாறியிருந்த நம்மை, அன்பான வாழ்வுக்கு திசை மாற்றிய ஆண்டாக அமைந்திருந்தது.தற்போது தொற்று பரவல் குறைந்து, மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வருகிறோம். வர்த்தக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.பொருளாதார பாதிப்பில் இருந்து, மீண்டு வரும் மக்களிடம், லேசாக புன்முறுவல் பார்க்க முடிகிறது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த அனைவரும், கடமையுணர்வுடன் பணிக்கு திரும்பி விட்டனர்.இத்தருணத்தில், 2021 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கை தத்துவத்தை கற்றுக்கொடுத்த, 2020ஐ வழியனுப்பி விட்டோம். ஆனாலும், கற்றவை அனைத்தும் அனுபவ பாடமாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்க்கையை செம்மையாக்கட்டும்.அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வு, குறைவில்லாத செல்வம் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.அதேநேரம், உருமாறிய கொரோனா பரவ ஆரம்பித்திருப்பதாக, சுகாதாரத்துறை எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. அதனால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, கவனமாக பணிபுரிய வேண்டும்.இவ்வாண்டு இன்னொரு மிக முக்கியமான கடமை காத்திருக்கிறது. அது, சட்டசபை தேர்தல். இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. மிகவும் பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினர் வீடு தேடி வருவர்; வயதானவர்களை பார்த்தால் காலில் விழுவர்; கட்டியணைப்பர். வேஷத்தை கண்டு மயங்காதீர். கவனமாக இருங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆட்சி செய்யப் போகிறவர்களை தீர்மானிக்கப் போகிறீர்கள் என்பதால், தெளிவான பார்வையுடன், நன்மை செய்வோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.நம் ஒவ்வொருவரின் வரலாற்றிலும், 2020ம் ஆண்டு எவ்வாறு பதிந்ததோ, அதுபோல், 2021ல் புதிய சகாப்தம் படைப்போம்; வாழ்க்கை வளமாகட்டும்!