சென்னை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு விமரிசை
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது.
எண்ணுார், நெட்டுகுப்பம், சின்னம்மன் - சியாமளா தேவி கோவில், ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டையொட்டி, மூலவர் தாயாருக்கு, விசேஷ அலங்காரம் செய்யப்படும்.இம்முறை, கொரோனா ஒழிய வேண்டி, 2.15 லட்சம் எலுமிச்சை பழம், 5,250 மக்காசோளம், 3,000 சாத்துக்குடி, 2,750 கமலா பழம், 12 பெட்டி அலங்கார மணிகள், அன்னாசி, செவ்வாழை, வாழை உள்ளிட்ட பழ வகைகளை பயன்படுத்தி, விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
குரோம்பேட்டையை அடுத்த, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. திரிசூலநாத கோவிலிலும், காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 8:00 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குன்றத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், நத்தம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.