உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

இந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

 புதுடில்லி : அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவியுங்கள் என டுவிட்டரில் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் திடீரென டிரெண்ட் ஆனது.

சமூகவலைதளமான டுவிட்டரில் திடீரென ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும். பலர் அது ஏன், எதற்கு என்று கூட பார்ப்பது இல்லை, டிரெண்ட் செய்வார்கள். அதிலும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்ற கேட்கவே வேண்டாம். காட்டுத் தீ போல பரவி சமூகவலைதளத்தை ஆக்கிரமித்து கொள்ளும். அந்தவகையில் இப்போது #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது. இது எதற்காக என்று துல்லியமாக தெரியவில்லை. ஆனால் இந்துக்களின் ஒற்றுமைக்காகவும், அவர்களின் மனக்குமுறல்களாகவும் இந்த விஷயத்தை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவியுங்கள் என கூறி வருகின்றனர். காரணம் பல்வேறு மதங்களுக்கு வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் தான் அரசு கட்டுப்பாட்டிற்கு வருகிறது. மற்ற மதங்களுக்கு அது போன்று இல்லை என டுவிட்டர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்து கோயில்களில் வசூலாகும் தொகையில் பெரும் பணம் அரசு கஜானாவிற்கு செல்கிறது. ஆனால் மற்ற மத வழிபாட்டு தலங்களில் இருந்து அப்படி செல்வதில்லை. முகலாயர்கள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சி காலம் கடந்து இப்போது வரை இந்து கோயில்களில் உள்ள வருமானங்கள் ஏதோ ஒரு வகையில் சுரண்டப்பட்டு கொண்டிருகின்றன.

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் இன்றும் இந்து கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு வரி செலுத்துகின்றன. மற்ற மத வழிபாட்டு தலங்களில் இருந்து அப்படி வரி செலுத்துவது கிடையாது. ஏன் இந்து கோயில்களுக்கு மட்டும் இந்த பாகுபாடு என சிலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கோயில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் கூட அரசின் கஜானாவிற்கு தான் பெரும்பகுதி செல்கிறது. ஆனால் அத்தகைய கோயில் நிலங்களுக்கே பாதுகாப்பு கிடையாது. இன்றைக்கு ஏகப்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ளது வேதனையான விஷயம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

கோயில்களுக்கு மத உணர்வுகள் உள்ளன, கோயிலைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை இருக்கக்கூடாது. எங்கள் அமைப்புக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தான் ஊழல் நடக்கிறது. அத்தகைய கோயில்களின் செல்வம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கோயில்களைக் கட்டுப்படுத்த மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். இதுபோன்று பலரும் தங்களது மனக்குமுறல்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதனால் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்டில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !