ஆங்கில புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் நடை திறந்தது முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நான்காவது படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில், 60 தமிழ் தேவதைகளின் பெயர்களை கொண்ட படிகளில், குத்து விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், சக்கரபாணி, சாரங்கபாணி, திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் என மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. தஞ்சை மாவட்டத்தில், பூண்டி மாதா பேராலயம் உள்பட, அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருச்சியில் மலைக்கோட்டை விநாயகர் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.