வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டத்திற்காக, தேரை தயார் செய்யும் பணி துவங்கியது. பல்வேறு கோவில்களில் சமீபத்தில் நடந்த தேரோட்டங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், இங்கு ஏற்படாமல் இருக்க, கோவில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மூன்றாம் நாளான 2ம் தேதி காலை, பிரபல உற்சவமான கருடசேவை நடைபெற உள்ளது. தேரோட்டம், 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள், பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருள்வார். காலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்கும். தயாராகும் தேர்சமீபத்தில் சில கோவில் தேரோட்டத்தின் போது, விபத்துகள் நடந்ததால், வரதராஜப் பெருமாள் கோவில் நிர்வாகம், தேரோட்டத்திற்கு முன், தேரை முழுமையாக தயார் செய்ய முடிவு செய்துள்ளது. நேற்று, தேரைச் சுற்றியிலிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, 76 அடி உயரம் உள்ள தேரை தயார் செய்யும் பணி துவங்கியது.தேரோட்டத்திற்கு தேர் தயாராக உள்ளதா என்பதை பரிசோதித்து தெரிவிக்கும்படி, கோவில் நிர்வாகம் சார்பில், பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் தீவிரம்கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் கூறும்போது, "தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி, மின் வாரியம், காவல் துறை, தொலைத் தொடர்பு துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள் இணைந்து செய்து வருகிறோம். தேரை இழுப்பதற்கு, இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேரிலிருந்து 30 அடி சுற்றளவிற்கு, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார் என்றார். கண்காணிப்பு கேமரா விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சவுந்தரராஜன் கூறும்போது, ""தேரின் நான்கு புறமும் கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளோம். கூட்டத்தை பயன்படுத்தி, பிக்பாக்கெட், செயின் பறிப்பில் ஈடுபடுவோரை பிடிக்க, மாற்றுடையில் காவலர்கள் வலம் வருவர். கோவில் நுழைவு வாயில் மற்றும் முக்கிய சந்திப்புகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, நகர் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்து வருகிறோம், என்றார்.