எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடும் கட்டுப்பாடுகள்
சபரிமலை: எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஜன.,11, 12ல் நடைபெறுகிறது.
சபரிமலையில் மகரவிளக்கு விழா ஜன., 14ல் நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எருமேலி பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண பவனி. ஜன., 11ல் நடைபெறும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவின் பேட்டை துள்ளலில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் 50 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இவர்கள் பேட்டை த்துள்ளலுக்கு பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை வருவது வழக்கம்.
ஆனால் இந்த முறை இவர்கள் எருமேலியில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் வாகனங்களில் பம்பை வந்து சன்னிதானம் வரவேண்டும்.ஜன., 12ல் பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. இதற்கும் போலீஸ் உட்பட 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது காட்டுப்பாதை வழியாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜன.,12 மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படும் பவனி ஜன., 14 மாலை சன்னிதானம் வந்தடையும். வழியில் எங்கும் வரவேற்பு கிடையாது.ஜன., 14ல் மகரவிளக்கு விழா நடைபெறுகிறது.