செல்வ விநாயகர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை செல்வ விநாயகர், காளியம்மன் கோவிலில், இன்று (மே 31) கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் செல்வ விநாயகர், காளியம்மன், நாகர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மிகுந்த பொருட்செலவில் துவங்கப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று (மே 31) கும்பாபிஷேக விழா நடத்த, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, நேற்று பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன், ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இரவு, கோபுர கண் திறப்பு, பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (மே 31) அதிகாலை 5 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. * அதேபோல், ராசிபுரம் பட்டை பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்வாமி திருக்கோவிலில், நேற்று கும்பாபிஷேக நிறைவு விழா கோலாகலமாக நடந்தது. கோவிலில் நிறுவப்பட்டுள்ள, 12 ஆழ்வார்களுக்கும், இன்று (மே 31) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.