கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலம்
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலமாக நேற்று நடந்தது. கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோவில் திருவிழா கடந்த 13ம் தேதி கம்பம் சாட்டுதலுடன் துவங்கியது. 18ம் தேதி பூச்சொரிதல் விழா, 20ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூத வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், கஜலட்சுமி வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. கடந்த 27ம் தேதி எதிர்காப்பு கட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய மூன்று நாட்கள் திருவிழா 28ம் தேதி துவங்கியது. காலை 7 மணிக்கு தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நேற்று மாலை நடந்தது. மாலை 5.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக பல்வேறு பூஜைகள் நடந்தன. இதை முன்னிட்டு நேறறு மதியம் 12 மணிக்கு மாவிளக்கு படையல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இரவு வான வேடிக்கை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வான வேடிக்கையை கண்டு களித்தனர். கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று புஷ்ப வாகனம், நாளை (ஜூன் 1) கருட வாகனம், 2ம் தேதி மயில் வாகனம், 3ம் தேதி கிளி வாகனம், 4ம் தேதி வேப்பமர வாகனம், 5ம் தேதி பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 6ம் தேதி புஷ்ப அலங்காரம், 7ம் தேதி பஞ்ச பிரகாரம், 8ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9ம் தேதி ஊஞ்சல், 10ம் தேதி அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.