மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொடிமரம் வைப்பது எப்போது!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில், ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரத்தை, எப்போது வைக்கலாம் என பட்டர்களிடம் கோயில் நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது. இக்கோயிலில், திருவிழா துவங்கியதை அறிவிக்கும்விதமாக, சுவாமி சன்னதி எதிரே பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இது செய்யப்பட்டது என தெரியவில்லை. பல நூற்றாண்டு பழமையான தேக்கு வகையைச் சேர்ந்த இம்மரம் பழுதடைந்துள்ளது. இதற்கு பதில் புதிய கொடிமரம் அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது.கடந்தாண்டு செங்கோட்டை வனப்பகுதியில் இருந்து 61 உயரத்திற்கு தேக்கு மரம் வாங்கப்பட்டு, ஓராண்டாக செதுக்கப்படுகிறது. மொத்த மதிப்பு ரூ.15 லட்சம். புதிய கொடி மரம் ஐந்தரை அடி சுற்றளவு கொண்டதால், தற்போதுள்ள கொடி மரத்தின் சுற்றளவைவிட பெரியது. மேற்கூரையை பிரித்து, பழைய கொடி மரத்தை அகற்றி, புதிய மரத்தை வைக்க குறைந்தது 45 நாட்களாகும். இக்கோயிலில் ஆண்டுமுழுவதும் திருவிழா நடப்பதால், கொடியேற்றம் நிகழ்ச்சி பாதிக்காத வகையில், எப்போது புதிய மரத்தை அமைக்கலாம் என பட்டர்களின் கருத்தை கோயில் நிர்வாகம் கேட்டது. எந்த மாதத்தில் திருவிழா நாட்கள் குறைந்து வருகிறது, அடுத்த திருவிழா வருவதற்குள் புது கொடிமரத்தை அமைத்துவிடமுடியுமா என பட்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.