திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 3ல் வைகாசி விசாகம்!
ADDED :4878 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா, ஜூன் 3ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 9 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபம் வந்து, அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிப்பார். முருகனின் ஜென்மநட்சத்திரமான வைகாசி விசாகத்தன்று, சுவாமியை தரிசித்தால் ஆண்டுமுழுவதும் அவரை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். எனவே, அன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமியை தரிசிப்பர். இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரை பக்தர்கள் குழுக்களாக திருச்செந்தூர் வந்தவண்ணம் உள்ளனர்.