திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா!
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 21 முதல் 23ம் தேதி வரை சுப்ரமணியர் உற்சவம், 24ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கடந்த 29ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. நேற்று காலை தேர்த்திருவிழா நடந்தது. முன்னதாக செண்பக தியாகராஜர் உன்மத்த நடனத்துடன் நேற்று முன்தினம் இரவு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை துவங்கிய தேர் திருவிழாவை மின்திறல் குழும சேர்மன் சிவா எம்.எல்.ஏ., தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கலெக்டர் அசோக்குமார், சீனியர் எஸ்.பி., ஆண்டோ அல்போன்ஸ், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.செண்பக தியாகராஜர் மற்றும் பிரணாம்பிகை அம்பாள் தேர் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்கு வீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் கோஷங்கள் முழுங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உள்ளூர் விடுமுறை: தேர் திருவிழாவையொட்டி நேற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாரில் குவிந்திருந்தனர்.