உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

படைவீடு என்னும் சொல்லுக்கு, போர் புரிவதற்காக படைத்தளபதி படைகளுடன் தங்கும் இடம் என்று பொருள். முருகன் சூரனுடன் போர் புரியத் தங்கிய இடம் திருச்செந்தூர். அதனால் அத்தலம் படைவீடாகும். மற்ற கோயில்கள் அனைத்தும் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படும் ஆற்றுப்படைவீடுகளே.  ஆற்றுப்படை என்பதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு புலவர் வள்ளல் ஒருவரின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறார். வள்ளல் புலவருக்கு பரிசளிக்கிறார்.தன்னைப் போல் கஷ்டப்படும் மற்ற புலவர்களின் பசியும் தீர வேண்டும் என்ற  நோக்கத்தில், நீங்கள் இன்ன ஊரிலுள்ள வள்ளலைப் பாடினால் உங்களுக்கும் பொருள் கிடைக்கும், என வழிகாட்டுகிறார்.  ஆறுதல்படுத்துதலே ஆற்றுப்படுத்தல் ஆயிற்று. இதே போல, நக்கீரர் முருகன் அருள் என்னும் செல்வத்தைப் பெற்றார். தன்னைப் போல, மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி,சோலைமலை ஆகிய தலங்களுக்குச் செல்லும்படி வழிகாட்டுகிறார். இத்தலங்கள் மனித மனதை ஆறுதல்படுத்தும் ஆற்றுப்படைவீடுகள். முக்திவாழ்வுக்கு வழிகாட்டும் முத்தான தலங்கள். ஆற்றுப்படை கோயில்களே ஆறுபடைவீடுகளாக மாறின.

அவதரித்தான் ஆறுமுகன்: கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். சூரபத்மன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். இந்திரலோகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தைப் போக்கும்படி பிரம்மாவிடம் சென்றனர். தேவர்களே! சூரபத்மனை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நான் சொல்லும் ஆலோசனைப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உடனே, மன்மதனின் உதவியை நாடுங்கள். யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சிவனின் தவத்தைக் கலைக்கும்படி கூறுங்கள். அப்போது ஆற்றல் மிக்க சுப்ரமண்யமூர்த்தி அவதரிப்பார். அவரால் மட்டுமே சூரபத்மனை அழிக்க முடியும், என்று தெரிவித்தார்.  மன்மதனால்சிவனின் தவம் கலைந்தது. கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறுசுடர்கள் கிளம்பின . கங்கைநதியில் உள்ள சரவணத்தை அடைந்தன. ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக அவதரித்தனர். அந்நாளே வைகாசிவிசாக நன்னாள். இந்நாளில் முருகன் பிறந்ததால் விசாகன் என்ற பெயர் உண்டானது.

வாரியாரின் வள்ளி: வள்ளிக்கொடியின் அடியில் கிடைத்த பெண் குழந்தையை, வேடர் தலைவன் நம்பிராஜன் எடுத்து வளர்த்தான். அக்குழந்தைக்கு அக்கொடியின் பெயரையே வைத்தான் என்ற கதையே வள்ளியின் பெயர்க்காரணமாக விளங்குகிறது. ஆனால், வாரியார் வள்ளி என்ற பெயருக்கு வேறொரு விளக்கம் தருகிறார். அரசன் மனைவி அரசி, பொன்னன் மனைவி பொன்னி அதுபோல வள்ளல் மனைவி வள்ளி ஆனாள். முருகன் பன்னிருகைகளால் அடியார்களுக்கு அருளை வாரி வழங்குவதால் வள்ளலாகிறார். அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதால் வள்ளி என்கிறோம். வள்ளிக்கணவனான முருகனை வணங்கினால் வாழ்வு செழிக்கும். வள்ளிமணாளனாக முருகன் அருளும் தலம் திருத்தணி. இதனை அடுத்த ஆந்திராவில் அமைந்த சிற்றூரே வள்ளி அவதரித்த ஊர். சிற்றூர் என்ற சொல்லே சித்தூர் என தற்போது திரிந்து விட்டது. சின்ன ஊர் என்பது இதன் பொருள்.

வள்ளி திருமணம்: வள்ளியை முருகப்பெருமான் காதலித்து மணம் செய்தார். அவள் முருகனை அடைவதற்கு அவளுடைய உறவினர்களே தடையாக இருந்தனர். இறுதியில் வள்ளியின் தோழியே அவளை முருகனோடு சேர்த்து வைத்ததாக கந்தபுராணம் கூறுகிறது. உயிரையும் இறைவனையும் சேர்ப்பதை உணர்த்தும் தத்துவமே வள்ளிதிருமணம். வள்ளி என்பது உயிராகிய ஜீவாத்மா. வினைப்பயன்களே உறவினர்களைப் போல நம்முடன் இருந்து இறைவனுடன் சேர விடாமல் தடுக்கிறது. பக்தியே தோழியாக இருந்து அவனோடு நம்மைச் சேர்க்கிறது.

மகாமந்திரம் வேலும் மயிலும்: முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது வேலுமயிலும். இதனை மகாமந்திரம் என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பர். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் வேலுமயிலும் மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார். இந்தமந்திரத்தை வேலும் மயிலும் என்று ஜெபிக்காமல் ஆறெழுத்தாக வேலுமயிலும் என்றே ஜெபிக்க வேண்டும். முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.

முருகனே மும்மூர்த்தி: அழகென்ற சொல்லுக்கு முருகா என்பர். முருகன் என்பதன் பொருள் அழகன். முருகு என்னும் சொல்லில் தமிழின் வல்லினம்,மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்கள் உள்ளன. மெல்லினமாகிய மு விஷ்ணுவையும், வல்லினமாகிய ரு சிவனையும், இடையினமாகிய கு பிரம்மனையும் குறிக்கும் என்பர். முருகப்பெருமானை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

மொட்டைத் தலையில் ஜடாமுடி: முருகப்பெருமான் தாயின் சம்பந்தம் இல்லாமல் தந்தையான சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். இதை விளக்கும் விதத்தில் பழநியில் தண்டாயுதபாணி என்னும் பெயரில் சிவாம்சத்துடன் அபிஷேகப்பிரியனாக விளங்குகிறார். இவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றில் செய்யப்படும் அபிஷேகம் சிறப்பானவை. இவர் பார்ப்பதற்கு மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். ஆனால், அபிஷேகத்தின் போது ஜடாமுடி இருப்பதைக் காணமுடியும். ஸ்தல புராணத்தில் முருகனின் குடுமியழகு பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. போகர், புலிப்பாணி சித்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்தக்கோயிலில் சேரமன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.  சேரநாடான கேரளாவை நோக்கி முருகன் மேற்குமுகமாக வீற்றிருக்கிறார். இதனால், கேரளமக்கள் இக்கோயிலுக்கு அதிகம் வருகின்றனர்.

கிழவன் முருகன்: சிவபெருமானின் இளையபிள்ளை முருகன். இப்பெருமானுக்கு குறிஞ்சிக் கிழவன் தமிழ்க்கிழவன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. கிழவன் என்றால் உரிமை கொண்டவன் அல்லது தலைவன் என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் பெயர் பெற்றார்.

மந்திரப்பெயர்: நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் அக்னிகர்ப்பன் எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன் என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் சரவணபவன் எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. முருக பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான ஓம்சரவணபவ என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறு குழந்தைகளை வளர்க்கும்பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் ஏற்பட்டது.

பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

அழகென்ற சொல்லுக்கு முருகா: கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் கோடி கோடி. முருகன் கோடிகோடி மன்மதர்களுக்கு ஈடானவன். அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். என்ன மன்மதன்னு நினைப்போ! என்று தான் பரிகாசம் பண்ணுகிறோம். அப்படிப்பட்ட கோடிகோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் சுப்ரமண்யர். தமிழ் தேசத்துக்கு இவர் மீது ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்று அவரைப் போற்றுகிறோம். தமிழில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் முருகன் என்றே சூட்டியிருக்கிறோம். அழகு, அருள் இரண்டும் வேறு வேறில்லை. அழகே அருள் வடிவெடுத்து முருகனாக இருக்கிறார். சுப்பிரமணியரின் பெருமைகளில் மேலானது குருவாக உபதேசித்து மோட்சத்தைக் கொடுப்பது தான். குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த என்று அருணகிரிநாதர் சொல்றபடி அப்பாவுக்கும் உபதேசம் செய்தவர். ஞானபண்டித ஸ்வாமியாக இருப்பவர். அவர் நமக்கு அழகு, அறிவு, அருள், வீர தீரம், சக்தி எல்லாம் நமக்கு அனுக்கிரஹம் செய்கிறார்.
-சொல்கிறார் மகாபெரியவர்

முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட கேள்விகள் :

உலகில் கொடியது எது?

வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி, அவனிடத்தில் வறுமை, வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால் உணவு அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக் கொடியது என்றார். தமிழ் மூதாட்டி.

உலகில் இனியது எது?

இன்ப.. துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால் புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும் கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்.

உலகில் பெரியது எது?

இறைவன் அடியார்கள் உள்ளத்தில் வசிக்கிறான். எனவே தொண்டர்களது பெருமைதான் உலகத்தில் மிகப் பெரியது என்றார்.

உலகில் அரியது எது?

மனிதராய்ப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் ஊமை, செவிடு, குருடு போன்ற குறைகள் நீங்கிப் பிறப்பது அரிது. அப்படி நன்றாகப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நம்மை வந்தடைவது அரிதாகும். அவற்றை மேற்கொண்டால்தான் சுவர்க்கம் செல்வதற்கான வழி கிடைக்கும் என்றார் அருந்தவ மூதாட்டி. இந்த அற்புதமான உலகியல் நீதிகளை ஒளவையின் வாயால் நமக்காக எடுத்துரைக்க வைத்தான் தன் தமிழின் மிகுநேயனான ஆறுமுகச் செல்வன்.

சரணம் அடைந்தோம் சண்முகனே: வைகாசி விசாக நன்னாளில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறுங்கள்.

ஆறுபடைவீடுகளில் அருள்புரியும் ஆறுமுகனே! அகத்திய முனிவருக்கு உபதேசித்த குருநாதனே! ஈசனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த சிவபாலனே! கார்த்திகைப்பெண்டிரின் அன்பில் வளர்ந்த காங்கேயனே! வள்ளிக்கு வாய்த்தவனே! தவசீலர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தவமணியே! பச்சைமயிலில் பவனி வரும் பரம்பொருளே! உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.

ஞானதண்டாயுதபாணியே! செந்தூரில் வாழும் வேலவனே! பழநிமலையில் வீற்றிருப்பவனே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரக்கடவுளே! முத்தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வித்தகனே! பகைவனிடம் அன்பு காட்டிய பரம்பொருளே! சேவல்கொடியோனே! சிக்கல் சிங்காரவேலனே! தாயிற்சிறந்த தயாபரனே! கருணாகரனே! உன் பாதமலர்களைத் தஞ்சம் என வந்துவிட்டோம் ஏற்றுக்கொள்வாயாக.

தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவனே! கார்த்திகேயனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! தேவர்களுக்கு வாழ்வளித்த தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! திருமாலின்மருமகனே! அருணகிரிக்கு அருள்செய்த ஆறுமுகா! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளல் பெருமானே! அழகின் வடிவமாய்த் திகழ்பவனே! உன்னருளால் என் வாழ்வு வளம் பெற வேண்டும்.

கல்லாதவர்க்கு எளியவனே! கற்றவர்க்கு கனியாக இனிப்பவனே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! ஆனைமுகனின் சோதரனே! திருப்புகழ் நாயகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! குழந்தைக்கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தையும், மனதில் மகிழ்ச்சியையும் நிலைக்கச் செய்வாயாக.

சிவபார்வதியின் செல்வமகனே! தணிகாசலனே! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபதுமனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வள்ளிமணாளனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி நல்வழிக் காட்டியருள வேண்டும்.

தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பெற்றவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறுதலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவல்பழம் தந்தவனே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி நடத்திடும் செந்திலம்பதியே! கண் கண்ட தெய்வமே! கலியுகவரதனே! முத்துக்குமாரசுவாமியே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம் அபயம் தர வேண்டுமய்யா!

சரவணப்பொய்கையில் உதித்தவனே! பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! பிள்ளைக் கடவுளே! முத்தமிழ்வித்தகனே! சுவாமிநாதனே! ஒருகை முகன் தம்பியே! அருணகிரிக்கு அருளியவனே!  உன் கடைக்கண் காட்டி எங்கள் குறை தீர்த்திடப்பா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !