சென்னிமலையில் தைப்பூச தேரோட்டம்: பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயம்
 சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தைப்பூச தேரோட்டம் காலை நடக்கிறது. விழாவில் முக கவசம் அணியாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நடப்பாண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையுடன், சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா தேரோட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்தது. கடந்த, 20ம் தேதி விழா தொடங்கியது. நேற்றிரவு கைலயங்கிரி வாகனத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று இரவு, 7:00 மணிக்கு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. வழக்கமாக தேரோட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். நடப்பாண்டு கொரோனா வைரசால், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வடம் பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு, வடம் பிடிக்க அனுமதியில்லை என்று, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.