வடபழநி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் கோலாகலம்
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம். இதனை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில், தை பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. காலை, 5:30 மணி முதல், இரவு, 8:30 மணி வரை அபிஷேகம் நீங்கலாக, பக்தர்கள் தொடர் தரிசனம் செய்யலாம். தை பூசம் முன்னிட்டு மூலவர், அதிகாலை, 5:30 மணி முதல், 12:00 மணிவரை ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம், 1:00 மணி முதல், 4:00 மணிவரை சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:30 மணிவரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.கோவில் திருப்பணி நடப்பதால், பக்தர்கள் நலன் கருதி பால்குடம், காவடி, அலகு குத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.