துர்கா பூஜையில் ரூ.32 ஆயிரம் கோடியில் படைப்பு தொழில்கள்: மம்தா
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் மதிப்பு ரூ.32,377 கோடி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒருவாரம் நடக்கும் இந்தத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு என படைப்புத் தொழில்கள் அதிகம் உருவாகும். துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பை ஆய்வு செய்வதற்கென்று மேற்குவங்க மாநிலம் அரசு குழுவை அமைத்தது. பிரிட்டிஷ் கவுன்சில், ஐஐடி காரக்பூர், இங்கிலாந்தில் உள்ள ராணி மேரி பல்கலை ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்; ‛துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பு ரூ.32,377 கோடி என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏழு நாட்கள் நிகழும் பண்டிகையில் இது மிகப் பெரிய தொகை. இது மாலத்தீவின் ஜிடிபிக்கு ஒப்பிடத்தக்கது. துர்கா பூஜை திருவிழாவை உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும், எனக் கூறினார்.