பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
ADDED :1713 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டி, சின்னமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 23ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில், பலர், அலகு குத்திக்கொண்டனர். தொடர்ந்து, சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள், மாவிளக்கு தட்டுடன் பங்கேற்றனர். அப்போது, பெண்கள், தட்டில் கொண்டுவந்த தேங்காய்களை எடுத்து, சுவாமி சிலை முன் அமர்ந்த பக்தர்களின் தலை மீது, பூசாரி உடைத்தார். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், நிறைவேறாத செயல்களை மனதில் நினைத்துக்கொண்டு, தலையில் தேங்காயை உடைத்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டுகளில், வேண்டுதல் வைத்து நிறைவேறியதாலும், பலர், தலையில், தேங்காயை உடைத்து, வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர் என்றனர்.