டும்...டும் ஒலிக்க நந்தி கல்யாணம் பாருங்க!
                              ADDED :1682 days ago 
                            
                          
                          
நாளாம் நாளாம் திருநாளாம் என திருமண நாளுக்காக ஏங்கும் கன்னியர் ஏராளம். இவர்களின் மனக்குறை போக்க அரியலுார் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள நந்தீஸ்வரரும், சுயசாம்பிகை அம்மனும் காத்திருக்கின்றனர். இங்கு பங்குனி புனர்பூசத்தன்று (மார்ச் 23) திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 
‘நந்தி திருமணத்தை தரிசித்தால் முந்தி திருமணம் நடக்கும்’ என்ற பழமொழி உண்டு. கன்னியர், இளைஞர்கள் பங்குனி புனர்பூசத்தன்று இங்கு சுவாமியை ஒருமுறை தரிசித்தாலே நற்பலன் கிடைக்கும். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் இருக்கிறார். பாலாம்பிகை, சுந்தராம்பிகை என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. பிரம்மனுக்கு எதிரில் வேதங்கள் நான்கு நந்திகளாக உள்ளன. சிவனுக்கும் நந்திக்கும் நடுவிலுள்ள மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி பக்தர்கள் தீபமேற்றுகின்றனர். வைகாசி விசாகத்தன்று மார்க்கண்டேய முனிவர் மழுவேந்திய கோலத்தில் சிவன் காட்சி தருகிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டோர் ஜுரஹர தேவருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது
* தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ.,
* லால்குடியிலிருந்து 35 கி.மீ..
* அரியலுாரில் இருந்து 22 கி.மீ.,