மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
சென்னை- மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், பங்குனி மாத பெருவிழாவின் முக்கிய நாளான இன்று, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மூலவர்களாக, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா, விமரிசையாக நடக்கும்.இந்த ஆண்டிற்கான, 10 நாள் பங்குனி பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா, இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை, 8:00 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். காலை, 8:45 மணிக்கு, பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பின், ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. நாளை காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், திருக்காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.மருந்தீஸ்வரர் கோவில்திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நாளான, இரவு, 9:00 மணிக்கு, சந்திரசேகரர் புஷ்ப விமானம், தியாகராஜர் வீதி உலா நடக்கிறது.