பங்குனி உத்திரம்: பழநியில் தங்கரதம் புறப்பாடு நிறுத்தம்
பழநி:பங்குனி உத்திரத்தையொட்டி பழநி முருகன் கோயிலில் நாளை (மார்ச் 27) முதல் மார்ச் 30 வரை தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் செலுத்தி நேர்த்தி கடனாக பக்தர்கள் தங்கரதம் இழுக்கலாம். விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் காரணமாக தங்கரதம் நிறுத்தப்படும். இந்நிலையில் மார்ச் 22ல் துவங்கிய பங்குனி உத்திர விழா மார்ச் 31 வரை நடந்து வருகிறது. இன்று(மார்ச் 26) மலைக்கோயிலில் கோயில் சார்பாக தங்கரத புறப்பாடு நடந்தாலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.மேலும் பங்குனி உத்திரத்தையொட்டி நாளை (மார்ச் 27) முதல் மார்ச் 30 வரை தங்கரதப்புறப்பாடு நிறுத்தப்படுகிறது. மார்ச் 27ல் சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவத்திற்கு பின் கிரிவீதியில் இரவு வெள்ளி தேரோட்டம், மார்ச் 28 மாலை கிரிவீதியில் திருத்தேரோட்டமும் நடக்கிறது. மார்ச் 31 இரவு 7:00 மணிக்கு மீண்டும் தங்கரத புறப்பாடு நடைபெறும்.