வடபழநியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பங்குனி உத்திரம் கோலாகலம்
சென்னை: சென்னை வடபழநி முருகன் கோயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளுடன், பாதுகாப்பாக பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.
சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்கள், சிவ ஆலயங்களில் பங்குனி உத்திர திருநாளா விழா இன்று (மார்ச்.,28) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பவுர்ணமி நாள் பங்குனி உத்திரத் திருநாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும், சிறப்புக்கொண்ட நாளாகிறது.எனவே இந்த நாளை திருமண விரத நாள் எனவும், புராணங்கள் கூறுகின்றன. வ ஆலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது, புனித நீராடினால் புன்னிய பலன் கிடைக்கும்.
பங்குனி உத்திரம் அன்று சிவன் பார்வதியை கரம்பிடித்ததும், ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான், திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில், சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில்தான். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர் என புராணம் கூறுகின்றன.
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழநி ஆண்டவர் கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிக்கள் நடப்பதால், பக்தர்களிடம் பால்காவடி பெறவில்லை. தீர்த்தவாரி உற்சவமும் நடத்தப்படவில்லை. இருப்பினும், வழக்கமான நான்கு கால பூஜைகள், உச்சி கால சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
மாஸ்க் அவசியம் : பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான, முக கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். கோயில் ஊழியர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றினர். தரிசனம் முடித்து பக்தர்களுக்கு, விபூதி, உதிரிபுஷ்பம், சர்க்கரை, வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதுபோல், சென்னை பெசன்ட்நகர் அறுபடை வீடுமுருகன்கோவில், ரத்னகிரீஸ்வரர் கோவில், குன்றத்துார் முருகன் கோவில், கந்தக்கோட்டம், கந்தாஸ்ரமம், திருப்போரூர், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா விமர்சையாக நடந்தது.