விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமானோர் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு பங்குனி பொங்கல் விழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது. 2019ல் கொரோனா தொற்று பரவலால் பொங்கல் விழா நடக்கவில்லை. இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொங்கல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கினர்.
விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல்விழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் காலையில் இருந்தே கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
வழக்கமாக பொங்கல் அன்று இரவு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெரிசலை தவிர்ப்பதற்காக காலை முதலே பலர் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நோய்களை தீர்க்க கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், பெண்கள் மாவிளக்கு, ஆயிரங்கண் விளக்கு வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அடுப்பு பூஜை நடந்தது. பராசக்தி மாரியம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்தது.