உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பலம்மன் கோவில் விழா: சேவல் அறுத்து நேர்த்திக்கடன்

பாம்பலம்மன் கோவில் விழா: சேவல் அறுத்து நேர்த்திக்கடன்

குளித்தலை: டி.மேலபட்டி பாம்பலம்மன் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குளித்தலை அடுத்த, தளிஞ்சி பஞ்., டி.மேலபட்டி, தளிஞ்சி, ரெங்காச்சிப்பட்டி மற்றும் புரசம்பட்டி ஊர் மக்கள் சார்பாக, பாம்பலம்மன் கோவில் திருவிழா நடந்தது. முதல் நாளன்று நான்கு பட்டி  முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், பாம்பலம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. பாம்பலம்மன், சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க  வாணவேடிக்கையுடன் வீதி உலா வந்து, கோவிலில் குடிபுகுந்தது. இரண்டாம் நாள் விழாவின்போது, பக்தர்கள் அலகு குத்துதல், கிடா வெட்டுதல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு எடுத்தல்,  பொங்கல் வைத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி பாம்பலம்மனை வழிபட்டனர். அன்று இரவு, கருப்பசாமி வாகனம் முன்செல்ல, முத்துப்பல்லாக்கில் வாணவேடிக்கையுடன்  பாம்பலம்மன் வீதி உலா வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், ஆயிரக்கணக்கான சேவல்களை அறுத்து பாம்பலம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தளிஞ்சி, நெய்தலூர், வடசேரி, ஆர்.டி.மலை, சேப்ளாபட்டி, முதலைப்பட்டி, கள்ளை, ஆலத்தூர், கூடலூர், புத்தூர், கல்லடை, நங்கவரம், தோகைமலை, சிவாயம், திருச்சி, கரூர் போன்ற பகுதியிலிருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாம்பலம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !