பள்ளிவாசல்களில் இரவு நேர தராவீஹ் தொழுகைக்கு அனுமதி வழங்கிட கோரிக்கை
கீழக்கரை: கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காஜியார் மவுலானா சலாவுதீன் ஜமாலி கூறியதாவது;
வரக்கூடிய ஏப்., 13 அல்லது ஏப்ரல்., 14 முதல் முஸ்லிம்களுக்கு புனித ரமலான் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவு இரண்டு மணி நேரம் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். அதற்கான நேரம் இரவு 8 மணி அளவில் தான் ஆரம்பமாகிறது. இவ்வருடத்திற்கான இரவு நேர சிறப்பு தொழுகையின் முக்கிய நோக்கமாக, புனித ரமலான் காலம் முடியும் வரை இரவு 10 மணிவரை பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடத்திட அனுமதி வழங்குமாறும், அரசு வகுத்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வலியுறுத்துவோம் என்பதையும் தெரிவித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.