பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க கோரிக்கை
சென்னை:தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அனுப்பியுள்ள கடிதம்:
புனித ரமலான் மாதம், வரும், 13ல் துவங்குகிறது. அன்று முதல், மே, 14 வரை, முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடிப்பர். அதிகாலை, 4:00 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பர். சூரியன் அஸ்தமனமான பின், மாலை, 6:00 மணிக்கு, நோன்பை முடிப்பர். ரமலான் மாதத்தில், நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க, 2001ல், ஜெயலலிதா அனுமதி வழங்கினார்.
ஆண்டுதோறும் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை, பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், 13ம் தேதி ரமலான் நோன்பு துவங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை, அரசு உடனடியாக வழங்க வேண்டும்.ரமலான் மாதத்தில், இரவு நேரங்களில், தராவீஹ் தொழுகை தொழுவது வழக்கம். ஆனால், இரவு, 8:00 மணிக்குள், வழிபாட்டுதலங்களை மூடும்படி, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதை இரவு, 10:00 மணியாக மாற்றி அறிவிக்க வேண்டும். இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.