கீழக்கல்லூரணி சண்முகநாதர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா!
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகேயுள்ள கீழக்கல்லூரணி சண்முகநாதர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் அடுத்துள்ள கீழக்கல்லூரணி கிராமத்தில் சண்முகநாதர் கோயில் திருப்பணிகள் முடிந்து மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் முதல் நாள் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கீழக்கல்லூரணி கன்னிமாரியம்மன் கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்து வரும் போது யானை மற்றும் மேள தாளத்துடன் பவனி வருதல் நடந்தது. பின்னர் அனுக்ஞை, புண்யாக வாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், பிருத்சங்கரணம், குடஸ்தாபனம், ஷண்முக ஹோமம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடந்தது. அதனைத் தொடர்ந்து யந்த்ர பிரதிஷ்டை, கலச பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. விழாவின் இரண்டாவது நாள் மஹா கும்பாபிஷேக விழா அன்று காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் காலை முக்கிய நிகழ்ச்சியான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வருதலும் அதனைத் தொடர்ந்து பாலாபிஷேகம் மற்றும் வருடாந்திர வைகாசி விசாக பூஜைகள், அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கீழக்கல்லூரணி கிராமப் பொதுமக்கள், தர்மகர்த்தா மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள் ஆகியோர் செய்தனர்.