உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!

திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!

திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மேலும் இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக் கிருத்திகை, திருப்படித் திருவிழா, பிரம்மோற்சவம் மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். மாதம்தோறும் வரும் கிருத்திகை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும், ஒரு லட்சம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வந்து மூலவரை வழிபடுகின்றனர்.

பஸ்கள் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், தணிகை தேவஸ்தான விடுதியில் இருந்து மலைக் கோவிலுக்குச் செல்ல, இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள், ரூ.10 டிக்கட் பெற்றுக் கொண்டு பஸ்கள் மூலம் சென்று வரலாம். முக்கிய திருவிழா, விடுமுறை நாட்கள், திருமண முகூர்த்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் குவிவதால், இரண்டு பஸ்களிலும் இடம் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், கூடுதலாக இரண்டு பஸ்களை வாங்கியுள்ளது.

இம்மாத இறுதியில்: இது குறித்து, கோவில் இணை ஆணையர் தனபால் கூறும் போது, மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டு தேவஸ்தான பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிதியில் இருந்து, 36 லட்ச ரூபாய்க்கு இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழித்தட அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி வந்தவுடன், இம்மாத இறுதிக்குள், புதிய பஸ்கள் இயக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !