நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்: மதுரை ஆதீனம்!
மதுரை: நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார், என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனாலும், "பதவி விலக போவதில்லை என நித்யானந்தாவும், "பதவி நீக்கம் செய்ய போவதில்லை என மதுரை ஆதீனமும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், பெங்களூரூ பிடதி ஆசிரமத்தில், ஏற்பட்ட மோதல் தொடர்பாக நித்யானந்தா தலைமறைவானார். ஆசிரமத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா அறிவித்தார். இதைதொடர்ந்து, மதுரை ஆதீனம் மட்டும் மதுரை திரும்பி ஓய்வு எடுக்கிறார். அவர் நமது நிருபருக்கு மொபைல் போனில் அளித்த பேட்டி:
* இளைய ஆதீனம் நித்யானந்தா எங்கு இருக்கிறார்?
அவர் இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்.
* நித்யானந்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறதே?
இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை
* பிடதி ஆசிரமத்திற்கு "சீல் வைத்துள்ளது பற்றி?
யார் சொன்னது? "சீல் வைக்க போவதாகதான் கூறினார்கள். அங்கு வழக்கம்போல் ஆன்மிக பணிகள் நடக்கின்றன. இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம் என்று போனை "கட் செய்தார். நித்யானந்தா இருப்பிடம் குறித்து, மடத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, "அவர் பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார் என்றனர். இதற்கிடையே, மதுரை ஆதீன மடம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஆதீன மட பொறுப்பாளர்கள், ""வழக்கம் போல் அன்னதானம் நடக்கிறது. யாராவது பிரச்னை செய்வதற்காகவே வருவதால், முன்னெச்சரிக்கையாக பிரதான கேட் மட்டும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள், விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர், என்றனர். மடத்தில் நித்யானந்தா இருந்தபோது, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் சீடர்கள் மடத்தில் தங்கி சேவை செய்தனர். தற்போது 4 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட சில சீடர்கள் மட்டுமே தங்கி உள்ளனர்.