கொரோனா எதிரொலியால் பெரியகோவில் மூடல்
தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் தொற்றால், தஞ்சாவூரில் பெரிய கோவில் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், தலையாட்டி பொம்மை விற்பனை மந்தமாகி உள்ளது.தஞ்சாவூரில், உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், அரண்மனை கலைக்கூடம், சரஸ்வதி மஹால் நுாலகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
பெரிய கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, பெரிய கோவில் மூடப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை குறைந்து போனது.தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், தலையாட்டி பொம்மை விற்கும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி, 33 வியாபாரிகள், தள்ளுவண்டியில் தலையாட்டி பொம்மைகளை வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.கட்டுப்பாடுகள் காரணமாக, பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தும், பொம்மைகளை வாங்க ஆள்ளில்லாமல், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.