அக்னி நட்சத்திரம் தொடங்கியது : தான - தர்மங்கள் செய்யலாம்
ஆண்டு தோறும், சித்திரை, 21 முதல், வைகாசி, 14 வரை, வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதை, ‘அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வர். அஸ்வினி முதலான, 27 நட்சத்திரங்களில், எந்த நட்சத்திரமும், அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி, 3ம் காலில், சூரியன் பிரவேசிக்கும் காலத்தை, ‘அக்னி நட்சத்திர காலம்’ என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த ஆண்டு, இன்று முதல், வரும், 29 வரை, அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
இந்த காலகட்டத்தில், அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகளில், வெப்பத்தின் காரணமாக, வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக, பூமியின் வெப்பம் வெளியேறும். அந்த பிளவுகளில், காய்ந்த இலைகளும், சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இவற்றை ‘கர்ப்பஓட்டம்’ என்பர். இந்த அக்னி நட்சத்திர நாட்களில், செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது. நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக் கூடாது.