சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி!
அவினாசி: அவினாசி அருகே சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூரில், அறம் வளர்த்த நாயகி உடனுறை, வாலீஸ்வரர் கோவில் உள்ளது. அர்ச்சகர் நடராஜன், நேற்று காலை, 6.00 மணிக்கு, கோவில் நடையை திறந்து, உள்ளே சென்றார். வாலீஸ்வரர், சுப்ரமணியர், நடராஜர், சிவகாமி அம்மன் சன்னிதிகளின், கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி, போலீசுக்கு தெரியப் படுத்தினார். சேவூர் போலீசார், கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். வாலீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த, வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும், திருடு போயிருந்தது தெரிய வந்தது. சுப்ரமணியர் சன்னிதியில் இருந்த வேல் எடுக்கப்பட்டு, அருகில் உள்ள நடராஜர் சன்னதியின், பூட்டு மற்றும் கிரில் கதவு வளைக்கப்பட்டிருந்தது. திறக்க முடியாததால், திருடர்கள் திரும்பிச் சென்றது தெரிய வந்தது. கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன், சேவூர் போலீசில் புகார் செய்தார். கோவையில் இருந்து தடயவியல் நிபுணர்கள், கோவிலுக்கு சென்று கை ரேகைகளை சேகரித்தனர். செயல் அலுவலர் கூறுகையில், 25 கிராம் எடையுள்ள வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும் திருடு போயுள்ளது. நடராஜர், சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலைகள் இருந்த சன்னிதியை, திறக்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி ஐம்பொன் சிலைகளை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வைக்க பரிசீலித்து வருகிறோம், என்றார். வாலீஸ்வரர் அறக்கட்டளை தலைவர் தேவராஜ் கூறுகையில், கோவில் பாதுகாப்புக்கு, செக்யூரிட்டியை நியமிக்க வேண்டும். போலீசார் இரவு ரோந்தின் போது, கோவில் அருகேயும் சென்றால், பாதுகாப்பாக இருக்கும். நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை, இங்கேயே, வைத்திருக்க வேண்டும், என்றார்.