புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா நிறைவு
திருச்சி: திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் சர்ச் தேர்த்திருவிழா இனிதாக நிறைவுற்றது. திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் சர்ச் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பாலக்கரை சகாய அன்னை சர்ச் அதிபர் லூயிஸ் பிரிட்டோ அடிகளார், கொடியை ஏற்றி வைத்து, திருப்பலி மற்றும் மறை உரையாற்றினார். மறுநாள் மாலை திருப்பலி மற்றும் மறை உரையை ஆலய பங்குத்தந்தை இஞ்ஞாசிமுத்து, இணை பங்குத்தந்தை சவரிராஜ் ஆகியோர் கூட்டாக நிகழ்த்தினர். தொடர்ந்து புனிதரின் அலங்கார தேர்பவனி முக்கிய வீதிகளில் உலா வந்தது. அடுத்தநாள் நடந்த கொடியிறக்க நிகழ்ச்சியில், திருப்பலி மற்றும் மறை உரையை, ஆர்.சி., மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தாளாளர் சூசைராஜ் அடிகளார் நடத்தி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பழையகோவில் பங்குத்தந்தை அன்புரோஸ் அடிகளார் பங்கேற்றார்.