ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; கோவையில் அறநிலையத்துறை அதிரடி
கோவை: கோவையில் கடந்த பத்தாண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம், நேற்று அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமை யான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பாக வழக்கு கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் அடிப்படையில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கொண்ட அதிகாரிகள் குழு முன்னிலையில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள், நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. 990 சதுர அடி கொண்ட இந்த பகுதியின் இன்றைய மார்க்கெட் விலை, ஒரு கோடி ரூபாய். கோவை மண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. படிப்படியாக ஒவ்வொன்றும் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும், என்றார்.