உள்ளம் உருகுதய்யா முருகா...! திறந்தது கதவு; கிடைத்தது தரிசனம்
கொரோனா ஊரடங்கு தளர்வால், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஈரோடு மாவட்டத்தில் கோவில்கள் திறக்கப்பட்டன. உள்ளம் குளிர, தங்களுக்கு பிடித்த அம்மனை, முருகனை பக்தர்கள் வழிபட்டு மெய் மறந்தனர்.
கொரானா பரவலால், கடந்த மே, 10 முதல், கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. நேற்று முதல் மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான தளர்வு அமலுக்கு வந்ததால், ஈரோடு மாவட்டத்தில், 55 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன. திண்டல் வேலாயுத சுவாமி கோவில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், பெரிய மாரியம்மன் கோவில்களில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் மூலவருக்கு, தைல காப்பு செய்யப்பட்டுள்ளதால், சிரசு, பாதங்களை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேசயம் மூலவர் சன்னதியில் உற்சவர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அருள் பாலித்தார்.
சென்னிமலையில்...: சென்னிமலை முருகன் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு வழக்கம்போல் நடைதிறப்பு, கோ பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்துக்குப் பிறகு, ராஜாகோபுரம் முன் நின்று, பல பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பண்ணாரியில்...: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில், ஏப்., மாத இறுதி முதலே, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை, நடை திறக்கப்பட்டது. 71 நாட்களுக்கு பிறகு பண்ணாரி அம்மனை, பயபக்தியுடன் பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
கோபியில்...: கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே தரிசனம் செய்ய வந்தனர்.
கொரோனா கட்டுப்பாடு: கோவில்களில் அனைத்து பக்தர்களும், தெர்மல் ஸ்கேனரில் உடல் வெப்பநிலை பரிசோதித்து, சானிடைசர் வழங்கப்பட்ட பிறகே, அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். மொத்தத்தில் இரண்டு மாதத்துக்குப் பிறகு, கோவில்கள் திறப்பால், பக்தர்கள் நிம்மதி அடைந்து, தங்களின் இஷ்ட தெய்வங்களை, கண்ணீர் மல்க, உள்ளம் உருக தரிசித்து பரவசம் பெற்றனர்.